செல்வநகர், தோப்பூர் பகுதிகளில் கனகசபாபதி தயாளச்சந்திரன்

செல்வநகர் தோப்பூர் பகுதியில் உள்ள நிலக்கண்ணி வெடி புதைக்கப்பட்ட பிரதேசமொன்று

நிலக்கண்ணி வெடி புதைக்கப்பட்டுள்ள பிரதேசத்தின் வாயிலில் சிவப்பு கொடி எச்சரிக்கை பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

நிலக்கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அவரவர் பணிகளுக்கு ஏற்ப வித்தியாசமான நிறங்களிலான உடைகளை அணிந்துகொள்வர்

செல்வநகர் பகுதியில் நிலக்கண்ணி வெடியகற்றும் பணியாளர்

30 கிராம் எடையுடைய நிலக்கண்ணி வெடியொன்று

டெனிஷ் நிலக்கண்ணி வெடியகற்றும் குழுவினர் கடந்த 2008 ஜனவரி மாதம் முதல் செல்வநகரில் பணியாற்றி வருகின்றனர்

செல்வநகரைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் குடத்தில் நீரை எடுத்துச் செல்கின்றார்

Tuesday, June 2, 2009

நிலக்கண்ணி வெடியகற்றல் ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட தொழிலாகும்

னக்கு யுத்தம் தொடர்பான அனுபவம் உண்டு. யுத்தத்தின் கோரப்பிடியில் மக்கள் அல்லறுவதனை நான் நேரில் பார்த்திருக்கின்றேன். எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியை நான் தேர்வு செய்தேன் என்றார் கனகசபாபதி தயாளச்சந்திரன் (31) குறிப்பிட்டார்.

தயாளச்சந்திரன் யாழ்ப்பாணத்தின் ஏழாலை பகுதியைச் சேர்ந்தவர் எனினும், யுத்தத்தின காரணமாக வவுனியாவில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார்.

2004ம் ஆண்டு ஜூலை மாதமளவில் தயாளச்சந்திரன், டென்மார்க் நாட்டில் தலைமையகத்தினை கொண்ட நிலக்கண்ணி வெடியகற்றும் அமைப்பில் நிலக்கண்ணி அகற்றும் பணியாளராக இணைந்து கொண்டார். தற்போது அவர் தற்போது பத்து பேரைக் கொண்ட நிலக்கண்ணி வெடியகற்றும் குழுவின் பொறுப்பாளராக கடமையாற்றுகின்றார்.

தயாளச்சந்திரனுக்கு ஓர் ஆண், ஓர் பெண் என இரண்டு குழந்தைச் செல்வங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்ணியா, வான்காலி, குச்சவெளி, திரியாய், புலிக்கண்டிகுளம், மட்டுவில், பூநகர் மற்றும் செல்வநகர் ஆகிய பிரதேசங்களில் நிலக்கண்ணி அகற்றும் பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

செல்வநகர் மற்றும் தோப்பூர் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்று வரும் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளை தற்போது அவர் மேற்பார்வை செய்து வருகின்றார்.

கடுமையான வெப்பம் நிலவிய நாள் ஒன்றில் முதல் முதலாக கனகசபாபதி தயாளச்சந்திரனையும் அவரது சகாக்களையும் நான் சந்தித்தேன்.

நிலக்கண்ணி வெடி அகற்றும் பகுதிகளில் அணியும் விசேட அங்கியையும், தலைக் கவசத்தையும் அணிந்து கொள்ளுமாறு என்னிடம் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

தலைக் கவசத்தை ஒருபோதும் அகற்ற வேண்டாம் என தயாளச் சந்திரன் என்னிடம் தெரிவித்தார், இதனால் புகைப்படங்களை என்னால் சரியான முறையில் எடுக்க முடியாது போனது. மேலும், அவர்கள் குறிப்பிடும் குறித்த வழியில் மட்டுமே செல்ல வேண்டுமென என்னிடம் கண்டிப்பாக தெரிவித்தனர்.

நிலக்கண்ணி வெடியகற்றும் பிரதேசத்தை பார்வையிடும் சந்தர்ப்பத்தில் நான், தயாளச் சந்திரனுடன் ஊடாடினேன்.

நீங்கள் ஏன் ஓர் நிலக்கண்ணி வெடியகற்றும் பணியாளனாக மாறத் தீர்மானித்தீர்கள்?

கனகசபாபதி தயாளச்சந்திரன்: எனது பிறப்பிடம் யாழ்ப்பாணமாகும், நான் யுத்த சமயத்தில் அநேக அனர்த்தங்களை எதிர்நோக்கியிருக்கின்றேன். எனது மக்கள் யுத்த்தின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் காட்சிகளை நான் நேரில் பார்த்திருக்கின்றேன். எனவே மாறுபட்ட விதத்தில் எனது பிரதேச மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென உந்தப்பட்டடேன். இதன் காரணமாகவே நான் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணியை தேர்வு செய்தேன். எனினும், என்னுடைய இந்தத் தேர்விற்கு எனது குடும்பத்தார் எதிர்ப்பை வெளியிட்டனர்.

நிலக்கண்ணி வெடி புதைக்கப்பட்டிருக்கும் பிரதேசத்திற்கு முதல் தடவையாக சென்ற போது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்?

கனகசபாபதி தயாளச்சந்திரன்: எனது குடும்பம், எனது மனைவி மற்றும் பிள்ளைகள் அனைவரும் என் ஞாபகத்திற்கு வந்தார்கள். நிலக்கண்ணி வெடியகற்றல் குறித்து மூன்று வார கால கிரமமான பயிற்சி வழங்கப்பட்ட போதிலும், முதல் தடவையாக களத்திற்கு சென்ற போது எனக்குள் ஓர் அச்ச உணர்வு படர்ந்து கொண்டது. மறுபுறத்தில் நான் இந்தத் தொழிலை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டேன். நிலக்கண்ணி புதைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு செல்வதனை ஓர் புதிய அனுபவமாகவே நான் கருதினேன். நிலக்கண்ணி வெடிகளை அகற்றி அதில் மக்களை குடியேற்ற வேண்டும் என்பதே எனது ஆவாவாக அமைந்திருந்தது. நிலக்கண்ணி வெடி புதைக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மக்களை குடியேற்ற மேற்கொள்ளும் இந்த அளப்பரிய தொண்டின் பங்காளனாக வாய்ப்பு கிட்டியமை பெருமிதமளிக்கின்றது.

முதல் தடவையாக நிலக்கண்ணி வெடியொன்றை கண்டு பிடித்த போது எவ்வாறு உணர்ந்தீர்கள்?

கனகசபாபதி தயாளச்சந்திரன்: முதல் தடவையாக வெடிக்காத கண்ணிவெடியொன்றை நேரில் பர்த்த போது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். எனினும், இந்தக் கண்ணி வெடி கண்டு பிடிக்கப்படாமலிருந்தால் எத்தனை விலைமதிப்பற்ற உயிர்களை காவு கொண்டிருக்கும் என நினைத்துப்பார்த்தேன்.

என்ன செய்தியை நீங்கள் மக்களுக்கு கூற விரும்புகின்றீர்கள்?

கனகசபாபதி தயாளச்சந்திரன்: நிலக்கண்ணி வெடிகளையோ அல்லது சிவப்பு கொடிகளை கண்டால் அவற்றை அகற்ற முயற்சி செய்யக் கூடாது. மக்கள் இவ்வாறான பிரதேசங்களைவிட்டு அப்பால் செல்ல வேண்டும். மேலும், வெடிக்காத நிலக்கண்ணி வெடியொன்றை கண்டால் உடனடியாக பிரதேசத்தில் உள்ள நிலக்கண்ணி வெடி அகற்றும் குழுவிற்கு அறிவிக்க வேண்டும். குறிப்பாக நிலக்கண்ணி வெடிகளுடன் சிறுவர்கள் விளையாடக் கூடாது.

இளைஞர் யுவதிகள் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபட ஊக்கமளிப்பீர்களா?

கனகசபாபதி தயாளச்சந்திரன்: ஆம். நிச்சயமாக, இது வெறும் ஓர் தொழில் மட்டுமல்ல, இது ஓர் உன்னத சேவை இதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற முடியும். நிலக்கண்ணி வெடியகற்றும் பணியாளனாக கிடைக்கப் பெற்ற சந்தர்ப்பத்தை ஓர் வரமாகவே நான் கருதுகின்றேன். தொடர்ச்சியாக எனது குழுவைச் சேர்ந்தோருக்கு ஆதரவளிப்பேன். நிலக்கண்ணி வெடியகற்றல் என்ற பதத்தை கேட்ட மாத்திரத்தில் மக்கள் பீதியடைகின்றனர். எனினும், சரியான முறையில் பயிற்சி பெற்றுக் கொண்டால் எதனைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, அவதானத்துடனும் புத்தி சாதூரியமாகவும் செயற்பட வேண்டும்.

தெளிவான கடற்கரைப் போன்ற பிரதேசங்களில் ஒரு சதுர கிலோ மீற்றரில் உள்ள கண்ணிவெடிகளை அகற்ற அரை மணித்தியாலம் தேவைப்படும். சாதாரண நிலப்பரப்பில் ஒரு கிலோ மீற்றர் சதுரப் பரப்பில் கண்ணி வெடியகற்ற சுமார் ஒரு மணித்தியாலம் தேவைப்படும்.